An Extract of the Interview with Alagappa by Albert Fernando

அழகப்பா இராம்மோகன் உடன் மின்கானல்

– ஆல்பர்ட், விஸ்கான்சின், அமெரிக்கா (அமெரிக்காவில் தமிழ் வளர்ப்போர்)

எந்த ஒரு சமூகமும் , எந்தச் சூழலிலும் “மொழி” என்ற தன் சொந்த அடையாளத்தைத் தொலைத்துவிடக் கூடாது 1 தேமதுரத் தமிழ் அமெரிக்கத் தமிழர் இல்லங்களில், உள்ளங்களில் வேர் பாய்ச்சி விழுதுகள் விடக் காரணமானவர்கள் வணக்கத்திற்கு உரியவர்கள் தமிழைத் தவமாய், வேதமாய், வேள்வியாய், சுவாசமாய் , உயிராய், உணர்வாய் நேசித்து தமிழ் வாழ வளரத் தங்களை மெழுகுவர்த்தியாய் ஆக்கிக்கொண்டுள்ளவர்களின் வரிசையில் மூன்றாவதாக அமெரிக்காவின் இல்லிநாய்ஸ் மாநிலத்தில் சிகாகோவில் வாசம் செய்யும் அய்யா அழகப்பா இராம்மோகன் அவர்களின் காணல் இடம்பெறுகிறது .

1. உங்களைப் பற்றி ஒரு சிறு குறிப்பு – பிறந்தது, வளர்ந்தது, படிப்பு , தொழில், புலம்பெயர்தலுக்கான காரணம், பணி.

அழ.ராம்மோகன்:-

நான் பிறந்தது மலேசிய மண்ணான பினாங்கில். 1939 ஆம் ஆண்டு , இரண்டாம் உலகப் போர் காரணமாக இரண்டு வயது சிறுவனாக இருக்கும்பொழுது தந்தையார் ரப்பர் தோட்டம், வங்கித் தொழில் ஆகியவற்றை விற்று விட்டு குடும்பத்தோடு இந்தியா திரும்பினார். எனது பூர்வீகம் கானாடுகாத்தான் .

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இந்த ஊரை இன்று இந்திய அரசாங்கம் தென் இந்தியாவில் நான்கு புராதன பூர்வீக இடங்களில் ஒன்றாக அங்கீகரித்துள்ளது , இது மதுரைக்கும் திருச்சிக்கும் இடையே உள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தையும் அழகப்பா பல்கலைக்கழகத்தையும் கொடையாக ஈந்த வள்ளல்கள் வாழ்ந்த ஊர்.

தில்லிக்கருகில் உள்ள பிர்லா கல்லூரியில் அறிவியல் பட்டமும், பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டமும் பெற்றேன், அதைத் தொடர்ந்து இரு ஆண்டுகள் சென்னையில் மோட்டார் வாகனத் தொழிற்சாலையில் பொறியியல் வல்லுனராகப் பணி அதன் பின்னர் 1963இல் அமெரிக்காவிற்கு மேற்படிப்பிற்காகச் சென்று 1965இல் சிகாகோவில் முதுகலைப் பட்டம் பெற்றேன்.

அமெரிக்காவில் குடியுரிமை பெற்று இதுநாள் வரை அமெரிக்கத் தமிழனாகக் குடும்பத்தோடு இருந்து வருகிறேன். இரு வருடங்களுக்கு முன்பு ஒய்வு பெற்று, கடந்த இரு ஆண்டுகளாக தமிழ்ப் பணிசெய்து அது இன்றும் தொடர்கிறது.

என் மனைவி திருமதி மீனாட்சி உணவு சத்துத் துறையில் முதுநிலை பட்டம் பெற்று, ஆய்வாளாராகப் பல்கலைக்கழக மருத்துவமனையில் பணி ஆற்றுகிறார். ஒரு மகன், ஒரு மகள், இருவரும் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்து ஆளானவர்கள். பிள்ளை மருத்துவர், மகள் காப்பீட்டுத் துறையில் மேலாளர், 5 பேரக் குழந்தைகள், சுருக்கமாகச் சொன்னால், ஈன்ற நாடு மலேசியா! பண்பாட்டை ஊட்டி வளர்த்தது தமிழ்நாடு ! என்னை உலகத் தமிழனாக ஆக்கி, என்னை எனக்கு முழுமையாகப் புரிந்துகொள்ள வைத்தது அமெரிக்கப் பின்புலம் ,

2. அமெரிக்காவில் இருந்துகொண்டு உலகத் தமிழ் மொழி அறக்கட்டளையை நிறுவி உலகெலாம் தமிழ் சமுதாய முன்னேற்றத்துக்கு மிகப் பலரும் பாராட்டும் வகையில் பணியாற்றி வருகிறீர்கள். இதனை நிறுவிய நோக்கம், க செயல்பாடுகள் , எதிர்காலத் திட்டங்கள் குறித்து வாசகர்களுக்குக் கொஞ்சம் விரிவாகச் சொல்ல முடியுமா ?

சிறு வயதிலிருந்தே தமிழ் வழிக் கல்வி, ஆங்கிலத்திலும் அதன் வளம் காரணமாகப் பற்று எனது தமிழ் ஆர்வம் மிகுதி, எங்கள் விட்டில் தமிழ் புலவர்களுக்கு மிகுந்த மரியாதை, * , மிகுந்த உபசரிப்பு , எனது இளம் வயதில் தமிழின் அழகும் திறனும் என் மேல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின , தமிழ் இலக்கியமும் படைப்புகளும் என்னை வெகுவாக ஈர்த்தன, இருப்பினும் மனத்துக்குள் ஏதோ ஒரு பெரும் நெருடல், தேடல், அது தமிழ் நாட்டின் ஏழ்மையையும் சாதி மத ஏற்றத் தாழ்வுகளையும் பற்றியது, ஏன் இன்னும் அவை ஒழிக்கப்படவில்லை?, இந்தியச் சிந்தனை அதிலும் குறிப்பாக தமிழ்ச் சிந்தனை தான் தோற்றுவித்த சமயங்களின் மூலமாகவும் புலம் பெயர்ந்து வந்து தமிழ் மண்ணில் ஒட்டிக்கொண்ட சமயங்கள் மூலமாகவும் ஏன் தமிழர்களை உலக நாடுகளுக்கு ஈடாக முன்னேற்றவில்லை எனத் தேடினேன்.

அதற்காக வைணவம், சைவம், ஆசிவகம், சமணம், கிறித்துவம், இசுலாம் , யூதம் போன்ற மதங்களை ஆழமாகத் தேடிப் போனேன் விடை காண. முழுமையான விடை எதிலும் கிடைக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில் , என்னுடைய 40 ஆண்டு அமெரிக்க வாழ்க்கையில், 1990ஆம் ஆண்டில் எனக்கு இத் தேடலுக்கான விடை திருக்குறளை அமெரிக்க மக்களோடு ஒப்பிட்டுப் பார்த்ததில் கிடைத்தது.

திருக்குறள் மற்றும் பலதரப்பட்ட சமய நூல்களோடு பல ஆண்டுகளாக நெருங்கிய தொடர்பு இருந்ததால் அமெரிக்க மக்களின் ஒவ்வொரு வாழ்வியல் முறையும் திருக்குறள் நெறியோடு பெரும்பாலும் ஒத்துப் போவது தெரிகிறது. அமெரிக்க மக்கள் தங்களுக்கே தெரியாமல் திருக்குறளை அவர்களது நாட்டு அரசியலிலும் தனிமனித வாழ்விலும் பின்பற்றி வந்துகொண்டு இருக்கிறார்கள் எனக் கண்டேன். மனிதன், மனிதம், மனிதநேய ஒருமைப்பாடு , சமயங்களுக்கு அப்பாற்பட்ட ஒழுக்க நெறி போன்ற கருத்துகள் திருக்குறள் வெளிச்சத்தில் என்னுள் முழுமை அடைந்கன, தனிமனிதப் பிரச்சனைகளும் நாட்டுப் பிரச்சினைகளும் திருக்குறள் வெளிச்சத்தில் ஓடி விடுவதைக் கண்டேன்.

அத்தகைய அறநெறியைக் கிறித்து பிறப்பதற்கு முன்னரே ஒரு தமிழன் எழுதி வைத்துப் போனதைப் பார்த்துப் பிரமித்தேன், அதனால் திருக்குறளை வள்ளுவமாக ஏற்றுக்கொண்டேன். அதைத் தோற்றுவித்த தமிழ்ப் பண்பாட்டின் மேல் ஒரு தனி மரியாதையும் ஏற்பட்டது. தங்களுக்குள்ளேயே இம்மாதிரி ஒரு புதையலை வைத்துக்கொண்டு தமிழர்கள் ஏன் அதை மறந்து இருளிலே நெடுங்காலமாக உழன்றுகொண்டு இருக்கிறார்கள் என வியந்தேன். அதன் காரணமாகத் திருக்குறளைப் பொதுமறையாகவும் மற்ற சமய நூல்களைத் தனி மறைகளாகவும் கண்டு திருக்குறளை மூச்சும் மையமுமாக வைத்து உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தை 1990இல் நானும் என் அமெரிக்க நண்பர்களும் நிறுவினோம்.

அரசியலும் சாதி சமய வேறுபாடுகளும் இல்லாமல் திருக்குறளை உலக மக்களிடையேயும் தமிழ் மக்களிடையேயும் பல வழிகளில் கொண்டு செல்லவும் நம்பிக்கை வழி அல்லாமல் அறிவு சார்ந்த சிந்தனை வழிகளில் நின்று, தமிழில் மேற்கத்திய அறிவியலைக் கொண்டு வரவும் எமது அறக்கட்டளை இன்றுவரை தொடர்ந்து தொண்டு செய்து வருகிறது, இது வரை 17 திட்டங்கள் நிறைவேற்றுபட்டுள்ளன , அதன் முழு விபரங்களையும் எமது www.kural.org என்ற வலையில் காணலாம்.

குறிப்பாக திருக்குறளை பைபிளைப் போல உருவகப்படுத்தி 1800 பக்கங்களில் 1 அங்குல பருமனில் மிக மெல்லிய காகிதத்தில் அமெரிக்காவில் உள்ள பைபிள் அச்சிடும் அச்சகத்திலேயே 10,000 பிரதிகள் அச்சிட்டோம். அதன் தனிச் சிறப்பு என்னவெனில் திருக்குறளுக்கு மட்டும் 700 பக்கங்கள். அதோடு அத்திருக்குறளைத் தந்த தமிழ்ப் பண்பாட்டை கட்டுரைகளாக விளக்க900 பக்கங்கள். அதைத் தொடர்ந்து மூன்றாவது பகுதியாக தமிழின எதிர்கால வழிகாட்டிக்கு 200 பக்கங்கள். இவ்வாறு மூன்று பகுதிகளையும் ஒரே புத்தகமாக ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் சமைத்து உலகம் முழுதும் 2000 ஆண்டில் வெளியிட்டுப் பரப்பினோம்.

 

Item added to cart.
0 items - $0.00